Share

Wednesday, 20 February 2013

தாம்பரம் <==> சென்னை கடற்கரை


                       தாம்பரம் பேருந்து நிலையத்தில் நாங்கள் இற்ங்கிய போது மணி சரியாக மாலை ஐந்து. " மச்சான் சீப் இருக்காடா" கேட்டான் ரகு."ஏய்! என்ன நக்கலா,என்
சுருட்ட தலைக்கு என்னைக்குடா சீப் தேவைப்பட்டிருக்கு" இது நான். " சரி விடு.. மோஹன் நீ தாடா". " இளம் சொட்டைய மறைக்க என்னம்மா பாடுபடறான் பாரு".ரவியின் நக்கல் ரகுவை கொதிப்படைய வைத்தது."நோ..ஆங்கிரி மீ..", வில்லு வடிவேல் ஸ்டைலில்
கோபம் காட்டினான் ரகு. அவன் தீவிர வடிவேல் விசிறி.
                       
                      எங்களுக்கு அன்றுதான் செமஸ்டர் நிறைவடைந்திருந்தது. வெவ்வேறு ஊர்களில் பிறந்த எங்களை எங்கள் கல்லூரி விடுதி ஒன்றினைத்தது.நான் வேலூர்காரன், ரகுவுக்கு தஞ்சாவூர் பக்கத்தில் சிறிய கிராமம், ரவி மதுரைக்காரன்.மோஹனுக்கு தாம்பரம்தான் என்றாலும், விடுதியில் படிக்க வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வீட்டில் நிறைவேற்றி வைத்திருந்தனர்.செமஸ்டர் லீவுக்கு உடனே வீட்டுக்கு ஓடிட வேண்டாம், சென்னையை தெரிஞ்சுக்கலாமே என்று எண்ணி நண்பர்களுடன் ஆலோசித்ததில் சென்னை பீச் ஸ்டேஷன், பாரிமுனை இதெல்லாம் பார்த்துட்டு வரலாம் என்றான் மோஹன்.
"சென்னை பீச், ரயில் பயணம்... ஆஹா ஜாலி பண்ணிடலாம் மோஹன்," ஒரே குரலில் சம்மதித்தோம். தமிழக தலைநகரை இன்னும் விசாலமாக தெரிந்து கொள்ள துடித்தோம்.

                                  

                                              



"மச்சான், பஸ் ஸ்டாப்லயே வெயிட் பண்ணுங்க நான் போய் என் ஃபோனுக்கு டாப் அப் பண்ணிட்டு வந்துடறேன்", என்றான் ரவி. "ஆமா, நான் கூட இங்க புதுபட டிவிடி ஏதாவது கிடைக்குமான்னு பார்த்துகிட்டு வந்துடறேன்", என்று கூறினான் ரகு. இருவரையும் இழுத்துப் பிடித்த மோஹன்,"அதான் பீச் ஸ்டேஷன் போறோம்ல, அங்க கிடைக்காத டாப் அப் கார்டா, டிவிடியா... இப்பவே நாம லேட், அங்க போயிட்டு வந்து மறுபடியும் 10.00 மணிக்கு கடைசி பஸ் ஏறணும் புரியுதா..",  "ஆனா என் கிட்ட வெறும் இருநூறு ரூபாதான் இருக்கு" என்றேன் நான்."ஆமா அங்க எல்லாம் காஸ்ட்லியா இருந்த என்ன பண்றது, என் 150 ரூபா கூட பத்தாதே" சிணுங்கினான் ரவி."டேய் அங்க எல்லாம் சீப் ரேட்டுடா," அனைவரையும் சமாதானப்படுத்தி, சப்வே கிராஸ் செய்து, ரயில் நிலையத்துக்கு இழுத்து சென்றான் மோஹன்.

                                           அனைத்து கவுனடர்களிலும் கூட்டம்," நான் தான் டிக்கெட்டுக்கு ஸ்பான்சர் பண்ணுவேன்" என்று சொல்லி க்யூவில் நின்று கொண்டேன். மற்ற மூவரும் அங்குள்ள செல்ஃபோன் விளம்பரங்களையும், தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷினைப்பற்றியும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை க்யூவில் நின்று கொண்டே பார்த்த்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு கைலி கட்டிய ஆசாமி க்யூவில் சாமார்த்தியமாக நுழைய முயன்றான்."மச்சான்.." என்ற என் அபயக் குரல் அவர்களை அடைந்தவுடன், சற்று தூரத்திலிருந்த மூவரும் வேகமாக ஓடி வந்து அவனை இழுத்து வெளியே தள்ளினர்.அவன் குடித்திருந்தான்.கால்கள் தடுமாறி ஏதோ உளறிக்கொண்டே இருந்தவனை அவன் நண்பன் எவனோ பிடித்து ஓரமாய் இழுத்துச் சென்றான்."ச்சே... என்ன ஜென்மங்களோ" என்று நான் அலுத்துக்கொண்டிருந்தபோதே என் முறை வந்தது, " நாலு பீச் வித் ரிடர்ன்," சரியாக 56 ரூபாய் கொடுத்தேன்.
எங்கு சென்றாலும் சரியான சில்லறை கொடுப்பது என் பழக்கம்.
                             ஆளுக்கொரு டிக்கெட் என பிடுங்கிக்கொண்டு வேகமாக படிக்கெட்டுகளில் ஏறினர், கூடவே நானும். வேகமாக ஏறியதில்
ரகுவின் கால்கள் படிக்கட்டுகளில் இடித்துக் கொண்டது, வலி தாங்கமுடியாமல், " யம்மா.. முடியல" என்றான். " அடிப்பட்டாலும் வடிவேல் ஸ்டைல்லதன் அழுவீங்களோ, வேகமா வாடா" என்று அவனை இழுத்துக்கொண்டு ஏறினான் ரவி.நாங்கள் இரண்டாம் பிளாட்பாரத்தில் இறங்குவதற்கும், "B" என்று குறிக்கப்பட்ட ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது."B  ன்னா bad train  னு அர்த்தமாடா?" அப்பாவியாய் கேட்டான் ரவி. "B ன்னா Beach மறுபடியும் அங்கிருந்து ரிடர்ன் அகும்போது 'TBM' னு மாத்திடுவாங்க. 'TBM' ன்னா Tambaram" விளக்கமளித்தான் மோஹன்.குமுதம், டாடா இன்டிகாம் என பல வித விளம்பரங்களை தாங்கி வந்த ரயிலில், விளம்பரம் ஏதும் எழுதப்படாத பெட்டியே எங்கள் சாய்ஸாக இருந்தது."வண்டி கிளம்பரத்துக்குள்ள வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு, ஓடிப்போய் Sport star மேகசினை வாங்கி வந்தேன் நான்." For the kind Attention of Passenger.." ஆங்கிலத்தில் தொடங்கிய அறிவிப்பு, தமிழிலும் பிறகு இந்தியிலும் கூறப்பட்டது." தோ நெம்பன், பிளாட்ஃபார்ம் மே பிரவானா ஹோகி" என்று இந்தி அறிவிப்பு முடிந்ததும் வண்டி கிளம்பியது.நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்வண்டி பயணம் என்பதால் நாங்கள் உற்சாகமடைந்தோம்.





 தாம்பரம் சானடோரியம் ஸ்டேஷனில் ஏறிய ஒரு கண்ணாடிக்காரர் எங்கள் முன் வந்தமர்ந்தார்.கொஞ்சம் வீங்கிய வயிறு, கையில், சில கோப்புகளை தாங்கிய பை என அரசு ஊழியர் என பார்த்தவுடனே சொல்லும் தோற்றம் அவருக்கு. என் கையிலிருந்த Sportstar-ஐ மோஹன் எடுத்து புரட்டிக்கொண்டிருந்தான். கண்ணாடிக்காரரின் செல்ஃபோன் சிணுங்கியது."ஆங்! இதோ சானடோரியத்துல டிரெயின் ஏறிட்டேன் , இன்னும் டிவெண்டிஃபைவ் மினிட்ஸல
சைதாப்பேட் வந்துடுவேன்... நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க எல்லா ஏற்பாட்டையும் நானே பார்த்துக்குறேன்.." தொடர்ந்த அவருடைய பேச்சில், அரசு வேலையைத்
தவிர்த்து ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் வேலை பார்க்கிறார் எனப் புரிந்தது. சட்டென்று திரும்பிப் பார்த்தால் ரவியும், ரகுவும் தங்களுக்குள்ளேயே சிரித்துக்
கொண்டிருந்தனர். என்னவென்று ரகுவைக் கேட்டால், " மச்சான், அந்த ஆளு பேண்ட், ஜிப்பே போடலடா.." அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
உண்மைதானா என்று உறுதி செய்து கொள்ள அவரது இடுப்புக்கு கீழே என் பார்வையை நகர்த்தினேன், ஆம்! உள்ளே மடித்து வைத்த அவரது சட்டை அந்த மானம் காக்கும் இடைவெளியில் பல் இளித்துக்கொண்டிருந்தது. அவர் செல்ஃபோனை பாக்கெட்டில் வைத்துவிட்டு மாலை நாளிதழ் ஒன்றை மும்மரமாக புரட்டிக்கொண்டிருந்தார். நண்பர்களின் சிரிப்பை அடக்கிவிட்டு மெல்லிய குரலில் சார் என்றேன்,பேப்பர் விலகியது, என்ன என்று புருவங்களை உயர்திதி கம்பீரப்பார்வையோடு கேட்டார். மெல்ல அவர் காதருகே சென்று " உங்க பேண்ட் ஜிப் போட மறந்துட்டு இருக்கீங்க", என்றேன். கம்பீரம் கலேபரம் ஆனது, அவசரமாக இழுத்துவிட்டு பேப்பர் படிக்க ஆரம்பித்துவிட்டார். பதற்றத்தை மறைக்கவும் பேப்பர் பயன்படும் என்று அன்று எனக்கு விளங்கியது.



   மாம்பலம் வந்தவுடன் வண்டியில் கூட்டம் நெருக்க ஆரம்பித்தது. இந்த கூட்டத்திலும், " சமோசா.. சூடானா சமோசா"  என்று வியாபாரம் பார்த்தார்சமோசாக்காரர். "ச்சே! கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்னு நெனச்சா எப்படி நெருக்கறானுங்க பாரு" புலம்பினான் ரவி.
என் காலை எவனோ மிதித்தான், "ஹலோ மிஸ்டர், கால மிதிக்காதீங்க" என்றேன். " சாரி சார்" என்று சன்னமான குரலில் பதில் வந்த திசையைப் பார்த்தால்
நீண்ட நாள் பழகிய நபர் போல தெரிந்தது.யாரென்று விலக்கிப் பார்த்தால், " அட! நம்ம பூபதி!." பூபதி எங்கள் வகுப்புத் தோழன், "என்ன மச்சான், இந்த நேரத்துல, இப்ப செமஸ்டர் லீவுதான, ஏன் இப்படி  உடம்பு கெடற அளவுக்கு ஊர் சுத்துற" விசாரித்தேன் நான். "இல்லையே இவன் அநாவசியமா ஊர் சுத்துற ஆள் கிடையாதே" இது ரகு. " என்ன மாப்ளே, மணி 6.30 ஆகுது.  எங்க போயிருந்த தயங்காம சொல்லு" என்றான் மோஹன், நாங்கள் கேட்க, கேட்க அவன் கலக்கமடைந்தான், " அது, அது வ்ந்து தி.நகர்.ல ஒரு சாக்லெட்
கம்பெனியில வேலை பார்க்குறன்டா". " என்னது வேலையா ?!" நால்வரும் அதிர்ந்தோம், " ஏண்டா அப்பா கவர்ன்மெண்ட் ஜாப்லதான இருக்காரு அப்புறமெதுக்கு
இதெல்லாம்?" விசாரித்தோம்." இல்ல அவர் அக்கா கல்யாண விஷயமா பிசியா இருக்கார்.அதான் அவர அநாவசியமா தொந்தரவு செய்ய வேண்டாம், நம்ம
தேவைகளை நாமளே பூர்த்தி செஞ்சுக்கலாம்னு, அடுத்த செமஸ்டருக்கு புக்ஸ் செகண்ட் ஹேண்ட்ல வாங்கணும்னா கூட குறைஞ்சது அறுநூறு ரூபாய் வேணுமில்ல,
அதான் லீவுல வேலைப் பார்க்குறேன்". "சரி, அப்படி என்ன வேலை அது?" விசாரித்தேன் நான். " அதுவா காலையில ஆறு மணியில இருந்து, சாயங்காலம் ஆறு
மணி வரைக்கும் வேலை பாக்கணும், தினமும் குறைஞ்சது 200 பாட்டிலுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஃபில் பண்ணனும், டிரே அடுக்கணும், சாக்லெட் கலவைய கிண்டி விடனும்னு, இன்னும் நிறைய, ஒரு நாள் வேலை செஞ்சா 125 ரூபா தருவாங்க, சாப்பாடு அவங்களே போடுவாங்க, சுமாராத்தான் இருக்கும்",
பேசிக்கொண்டிருக்கும்போதே, " சரி, பார்க் ஸ்டேஷன் வந்துடுச்சு நான் இறங்கிக்கறேன், நீங்க பீச்சுக்குதான போறீங்க, பத்திரமா போயிட்டு வாங்க"
விடைப்பெற்றான் பூபதி.







                  

கையில் செலவழிக்க வைத்திருந்த காசின் அருமையை, அதை சம்பாதிக்க ஒருவன் அனுபவிக்கும் வேதனைகளை, நெடிப் பொழுதில்
உணர்த்திவிட்டு மறைந்தான் பூபதி. அதுவரை ஆனந்த உலகில் மிதந்து வந்த நாங்கள் எங்களுடன் பயனித்த சக பயனிகளை கவனித்தோம்.
அவர்களுள்தான் எவ்வளவு வேற்றுமை, மகிழ்ச்சி, சோகம், களைப்பு, மறுநாள் பற்றிய கவலை. பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கையில் தொட்டுக்
கும்பிட்டான் ரகு.பீச் ஸ்டேஷனில் வண்டி நின்றபோது, எங்கள் நால்வருக்கும் ஏதோ நல்ல மாற்றம் வந்திருப்பதை உண்ர்ந்தோம்.ரயிலை விட்டு இறங்கி,
எதிர் திசையில் TBM என்று குறிக்கப்பட்டிருந்த ரயில் வண்டியில் ஏறினோம். இம்முறை எங்கள் பயணம் தாம்பரத்தை நோக்கி அல்ல, பொறுப்பான,
வளமான எதிர்காலத்தை நோக்கி.



Related Posts Plugin for WordPress, Blogger...

அழகி

அழகி
தமிழில் தட்டச்சு செய்ய