Share

Tuesday, 23 April 2013

க்ரிஸ் கெய்ல் சொல்லும் முட்டை ஆம்லெட்டின் சக்தி-குழந்தைகளை இனிமேல் எளிமையாக சாப்பிடவைக்கலாம்


க்ரிஸ் கெய்ல், மேற்கிந்திய தீவிலிருந்து இந்தியா வருகைப் புரிந்து அசரடித்துக் கொண்டு இருக்கிறார். இன்று புனேவிற்கு எதிரான போட்டியில்
ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் (66 பந்தில் 175 ரன் நாட் அவுட்).இவரைப் பொறுத்தவரை ஆரஞ்சு கேப் வாங்குவது மிக எளிமையானது போலும்,பட்டியலில் பின் தங்கி இருந்தவர்,
ஓரே மேட்சில் ஆரஞ்சு கேப் வாங்கிவிட்டார்.இது ஏதோ, நம் தமிழ் படங்களில் ஒரே  பாட்டில் ஹீரோ பணக்காரர் ஆவது போல் இருக்கிறது,அதிசயம் ஆனால் உண்மை என்று ரசிகர்களின் புருவம் உயர,எதிரணியரின் விழி பிதுங்குகிறது.
                    இவரை போன்ற ரியல் லைஃப் ஹீரோக்களை நாம் போற்ற வேண்டும்.கேப் வாங்கிவிட்டு, "நீங்க கேப்பே இல்லாம அடிச்சீங்களே, என்னதான் சாப்பிடறீங்க?" என வர்ணனையாளர் கேட்டால்,
"முட்டை ஆம்லெட்டும், பன்னும் தான்" என்று கூலாக சொல்கிறார், இந்த சிக்சர் மன்னன்.எனவே, பள்ளி விடுமுறையில் தவறாமல் IPL பார்த்துக்கொண்டு இருக்கும் சிறுவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்களாக
இருந்தும் சரியாக சாப்பிடாமல் அடம் பிடித்தால்,முட்டையின் சக்தியை எளிமையாக க்ரிஸ் கெய்ல்-ஐ  முன்னுதாரணமாக காட்டி,"கண்ணு, நீ முட்ட சாப்பிட்டா நல்ல பலசாலியா க்ரிஸ் கெய்ல் மாதிரி வரலாம்,
சாப்பிடுடா செல்லம்" என்று உணவு ஊட்டினால் குழந்தைகள் சமர்த்தாக சாப்பிடுவர்.ரியல் லைஃப் ஹீரோக்கள் வாழ்க.நம் சென்னை ஹீரோ, தோனி வாழ்க.சென்னை IPL-ஐ வெல்க.

மேலும் வாசிக்க....

Saturday, 23 February 2013

உன்னை காணாது நான்-இவ்வாண்டின் மிகச் சிறந்த பாடல்

  இசை என்னும் அற்புத வடிவத்தில் அபரிமிதமான
உழைப்பும், கலைஞர்களின் ஒருங்கிணைப்பும் இணைந்தால் எத்தகைய சிறப்பான கலைப்படைப்பு உருவாகும் என்பதற்கு விஸ்வருபம் திரைப்படைத்தின் இப்பாடலே சான்று.கமல்ஹாசன் எத்தனை பெரிய கலைஞர், இந்த பாடல் உருவான விதம் குறித்த
வீடியோவில் அவர் எவ்வளவு எளிமையாக இருப்பதை நாம் காண்கிறோம்.தன் சக கலைஞர்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் கருத்துக்களை அக்கறையுடன் கேட்டு, திரைப்பட
இயக்குவிப்பவர் ஆக இல்லாமல் ஒன்றிணைந்து இயங்குபராக மிளிர்கிறார்.

 அவரது முகத்தைப் பாருங்கள், ஏதோ புதிதாக கற்றுக் கொள்ளும் அறிமுக நடிகன் போல் உள்ளார்.இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையை ஆண்டவன் கொடுத்துள்ளான், யாரும் யாருக்கும்
குறைந்தவர்கள் அல்ல, இந்த உண்மையை பரிபூரணமாக உணர்ந்தவர் உலகநாயகன்.என்ன, ஆண்டவன் திறமையை வழங்கினான் என்பதை விட
பெற்றோர் வழங்கினர் என்று சொன்னால் அவருக்கு உச்சிதமாய் இருக்கும்.





மேலும் வாசிக்க....

Friday, 22 February 2013

வெல்லுங்கள் ஒரு சோப்




  
நகைச்சுவை நாடகம்

நிகழ்ச்சி தொகுப்பாளர்: வணக்கம் and WELCOME to தமிழகத்தின் பிரம்மாண்டமான கேம் ஷோ வெல்லுங்கள் ஒரு சோப்.
என் கிட்ட சோப் இருக்கு குளிக்க நீங்க தயாரா? பல வருஷங்களா குளிக்காம இருக்கறவங்கள sms போட்டியில select பண்ணி அவங்களுக்கு ஓணான் மார்க் குளியல் சோப் தந்து இனியும் குளிக்காம இருந்தா நல்லதில்லன்னு சொல்றதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.இது வெறும் கேம் ஷோ இல்ல,
ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:
சரி,நம்ம போட்டியாளர்கள்ல ரொம்ப நாளா குளிக்காம இருந்தவர் யாருன்னு நம்ம தடவியல் நிபுணர் தடம் தாமு ஒரு பட்டியல் கொடுத்து இருக்கார், இந்த  பட்டியல் படிதான் நாம இன்னைக்கு கேம விளையாடப் போறோம்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:Let's call our first contestant தேமல் ப்ரியன்

நிகழ்ச்சி தொகுப்பாளர்:வாங்க Mr.தேமல் ப்ரியன், எப்படி ஃபீல் பண்றீங்க?

தேமல் ப்ரியன்:என்னை விட என் குடும்பத்தார்தான் நான் இந்த போட்டியில
கலந்துக்கணும்னு ஆசைப்பட்டாங்க

நிகழ்ச்சி தொகுப்பாளர்:பின்ன எத்தனை நாளைக்குத்தான் அவங்க கப்ப தாங்குவாங்க.
சரி வாங்க விளையாடலாம்.இந்த போட்டியில மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும்.
ஓவ்வொரு கேள்வியின் முடிவிலயும்
உங்கள குளிக்க ஊக்கப்படுத்த Deodrant,Powder,Shampoo,Towel மற்றும் உச்சக்கட்ட பரிசாக ஒரு
சோப் வழங்கப்படும்.போட்டிக்குத் தயாரா?

தேமல் ப்ரியன்:ரெடி சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:மற்றும் உங்களுக்கான Lifelines,1/2:1/2-சீட்டு குலுக்கி-Msg a Friend.
முதல் கேள்வி-ஆஸ்கர் விருது எதற்காக கொடுக்கப்படுகிறது?
A.நல்லா சாப்டதுக்காக B.அதிகமா அடி வாங்குனதுக்காக
C.அதிக நாள் குளிக்காம் இருந்ததுக்காக D.சினிமாவுக்காக

தேமல் ப்ரியன்:I think CCCCCC.....

நிகழ்ச்சி தொகுப்பாளர்:அட நல்லா ராகம் போடறீங்களே

தேமல் ப்ரியன்:Yes I got it,ராகம்,Music.Option D சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:Computer Lock D.Very Good, சரியான விடை. You win a Deodrant.
அடுத்த கேள்வி-இலவச லேப்டாப் வேலை செய்யலனா என்ன பண்ணுவீங்க?
A.Service பண்ணுவேன் B.Hospital-ல admit பண்ணுவேன்
C.கொசு மருந்து அடிப்பேன் D.சாணி பூசி கோலம் போடுவேன்

தேமல் ப்ரியன்:என் பையனுக்கு இன்னும் கிடைக்கல சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:பரவாயில்ல கிடைச்சா என்ன பண்ணுவீங்க.

தேமல் ப்ரியன்:Option A சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:Correct Answer.கிட்ட வாங்க(முகர்ந்து பார்த்த பின்)
Oh No! நீங்க குளிச்சுட்டு வந்திருக்கீங்க.You are rejected.தடம் தாமுவையே
ஏமாத்திட்டியே.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:நம்ம பட்டியல்ல இருக்கும் அடுத்த போட்டியாளர் சிரங்கு சொரியன்.
Welcome Mr.சிரங்கு சொரியன்.குளிச்சு எத்தனை நாள் ஆச்சு?.

சிரங்கு சொரியன்:28 நாள் ஆச்சு சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:Oh! WOW......உங்களுக்கான கேள்வி,
ஞாபகமறதிகாரங்க என்ன பண்ணுவாங்க
A.செருப்ப பீட்சான்னு நினைச்சு சாப்பிடுவாங்க B.காதுக்கு போடுற Buds-அ வாயில போடுவாங்க
C.அவசரத்துக்கு பக்கத்து வீட்டுக்கு போயிடுவாங்க

சிரங்கு சொரியன்:சாரி சார் மறந்துட்டேன்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:WOW! நான் கேள்விய முடிக்காததுக்கு முன்னாடியே பதில சொல்லிட்டீங்களே, சரியான விடை.உங்களுக்கு ஒரு Deodrant பரிசு
இதன் மூலமா நீங்க குளிக்கலங்கறத யாரலயும் கண்டுபிடிக்க முடியாது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:ஜாக்கிசான் எங்கே கராத்தே கத்துக்கிட்டார்?

A.சௌகார்பேட்டை B.அண்ணாநகர்
C.சைதாப்பேட்டை  D.ஹாங்காங்க்

சிரங்கு சொரியன்:இவ்வளவு கஷ்டமா வெளிநாட்டுக்காரங்கப் பத்தியெல்லாம்
கேட்கறீங்களே சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:அதுதானே உண்மையான போட்டி, Lifeline
பயன்படுத்தீறீங்களா?

சிரங்கு சொரியன்:OK சார்,சீட்டு குலுக்கி Lifeline.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: சீட்டு குலுக்கல்ல வந்துள்ள விடை Option C.

சிரங்கு சொரியன்:நான் C Select பண்றேன் சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:Computer Spray C.நீங்க ஒரு Powder டப்பா ஜெயிச்சு இருக்கறீங்க.
அடுத்த கேள்வி, இவற்றுள் எந்த ராகத்தை பாடினால் மழை வரும்?

A.அடானா ராகம் B.கரகரப்பிரியா ராகம்
C.ஹன்சிகா மோத்வானி ச்சீ ஹம்சத்வனி D.அமிர்தவர்ஷினி

சிரங்கு சொரியன்:
Sir, I will SMS a Friend

நிகழ்ச்சி தொகுப்பாளர்: சரி போட்டி விதிப்படி,நீங்க வெறும் 20 எழுத்துக்கள்ள மெசேஜ் அனுப்பனும்

சிரங்கு சொரியன்: Msg:உன் பேரு அர்த்தம் என்ன?

Reply D மழை என்று வந்தது

சிரங்கு சொரியன்:D சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:சரியான விடை நீங்க Shampoo ஜெயிச்சு இருக்கறீங்க.
உங்களுக்கான அடுத்த கேள்வி
இவற்றுள் எது Washing Machine?

A.Sharukh khan B.Videocon C.Salmankhan D.Popcorn

சிரங்கு சொரியன்:என்ன சார், மறுபடியும் கஷ்டமான கேள்வியா கேட்கறீங்க, Lifeline சார்

நிகழ்ச்சி தொகுப்பாளர்:உங்களோட கடைசி Lifeline 1/2:1/2. Computer do 1/2:1/2
உங்களுக்கு மிச்சமிருக்கறது B.Videocon D.Popcorn

சிரங்கு சொரியன்:Pop... இல்ல Videocon சார்

நிகழ்ச்சி தொகுப்பாளர்:சரியான விடை.நீங்க ஒரு Towel ஜெயிச்சு இருக்கறீங்க

நிகழ்ச்சி தொகுப்பாளர்:நிகழ்ச்சியோட கடைசி கட்டத்துக்கு வந்துட்டோம், அடுத்த கேள்வி
உச்சகட்ட பரிசான சோப் கேள்வி.எப்படி ஃபீல் பண்றீங்க.

சிரங்கு சொரியன்:ரொம்ப மகிழ்ச்சியா சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:உங்களுக்கான கேள்வி,
அரசமன்னன் என்ன கட்டினார்?

A.மண்டபம் B.கலாசாலை C.வேட்டி D.லுங்கி

சிரங்கு சொரியன்:சார் அது வந்து,லுங்கியா வேட்டியான்னு ஒரே குழப்பமா இருக்கு சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:நல்லா யோசிச்சு சொல்லுங்க, உங்களுக்கு Lifelineகூட எதுவும் இல்ல.
உங்கள சுத்தி இருக்கறவங்களோட வாழ்க்கைய மாத்தப் போற கேள்வி இது.

சிரங்கு சொரியன்:சார் Inky pinky போட்டதுல கலாசாலா வருது சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:Are you confident?

சிரங்கு சொரியன்:
கடவுள் தான் காப்பத்தணும்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:
Congrats, அருமையான ஓணான் மார்க் சோப் ஜெயிச்சு இருக்கறீங்க.
இந்தாங்க சோப்.ஒழுங்கா குளிக்கனும் சரியா?.

சிரங்கு சொரியன்:சரி சார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்:நன்றி நேயர்களே.மீண்டும் சந்திப்போம் இது தமிழகத்தின்
பிரம்மாண்டமான கேம் ஷோ, வெல்லுங்கள ஒரு சோப்.




மேலும் வாசிக்க....

செல்போனைத் தாக்கும் விளம்பர பூதம்

                  ட்ரங்க் கால், டெலிகிராம், கடிதம் போன்ற மனிதனை குறுகிய வட்டத்துக்குள் அடைத்து வைத்த சாதனங்களிலிருந்து விடுதலையளித்த மாபெரும்
கண்டுபிடிப்பு செல்பேசி. இரவில் விடாது நச்சரிக்கும் கொசுவைப் போல தொந்தரவு செய்யும் விளம்பரங்களைப் பற்றி இப்பதவில் பார்க்கலாம்.

"நீங்கள் முன்ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் என தெரிந்துகொள்ளூங்கள் SMS PAST உங்கள் பெயர் 5**** கட்டணம் ரூ.3". சரி, மூன்று ரூபாய் போனால்
போகிறது என்று , ஆர்வத்தோடு message அனுப்பி reply பார்த்தால் தூக்கி வாரிப்போட்டது, " நீங்கள் எகிப்து பிரமிடு கட்டும் பணியாளர்களில் ஒருவராய் இருந்தீர்" என்றது.
இது பரவாயில்லை, உங்கள் காதல் ஜோடி பொருத்தம் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்று ஒரு செய்தி வந்தது. ஏற்கனவே வெறுப்பில் இருந்த நான்,
" செருப்பு, துடைப்பம்" ஜோடி பொருத்தம் அறிய SMS செய்தேன். என்ன ஆச்சரியம்!! " 96% செருப்பும், துடைப்பமும் பொருந்தி இருந்தன". மேலும், இந்த ஜோடி ஆத்மார்தமான ஜோடி என்றும் சண்டையின்றி வாழ்க்கையில் வெற்றி பெறும் ஜோடி என்றும் குறிப்பிடபட்டிருந்தது.


                                





அடுத்த மோசடிக்கு வருவோம். "இலவச வீடியோக்களை கண்டு ரசிப்பீர் , கட்டணம் 10p/10kb.கட்டணம் வசூலித்தால் அது எப்படி இலவசம் ஆகும்?. மேலும்,
ஆங்கிலம் சொல்லித்தருகிறேன், வேலைவாய்ப்பு வேண்டுமா? ராசிபலன் எப்படி? என டார்ச்சர் தொடரும். ஏதாவது ஒரு பட்டனை தெரியாமல் அமுக்கிவிட்டால்
பணம் மாயமாகிவிடும். அதை சரி செய்ய கஸ்டமர் கேருக்கு ஃபோன் செய்தால் மெஷிந்தான் பேசும். 7 அமுக்குங்கள் , 8 அமுக்குங்கள் எனக் கொல்லும்.


என்னதான் தொந்தரவு என்றாலும் மனைவியின் உதைகளைப் பொறுத்துக்கொள்வது போல் இதையும் பொறுத்துக்கொள்கிறோம். கட்டியாச்சு வேற வழி?
மேலும் வாசிக்க....

குழந்தை நட்சத்திரங்களும் சினிமாவும்

 கதாநாயகன் அவரது தம்பி,தங்கைகள் வாழ்க்கைச் சக்கரத்தில் தங்கள் பால்ய
பருவத்தில் பல துன்பங்களுக்குட்பட்டு வளர்கிறார்கள் என்னும் காட்சியில் பருவ மாற்றங்களுக்கேற்ப பல குழந்தை நட்சத்திரங்கள் பயன்படுத்தப்படுவார்கள்.இதெல்லாம் ஒரு காலத்தில், நான் பார்த்தவரையில் ஸ்லம்டாக் மில்லியனரில் தான் இவ்வாறு நேர்த்தியாக குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்ப்பளித்து இருந்தனர்.இப்போது நிலைமை?.
குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் மணிரத்னம்
தவிர இங்கு அனைவரும் கதாநாயகர்களையே குழந்தைகளாக
மாற்றி பள்ளி சீருடை அணியச் செய்கிறார்கள்.இவர்கள்
பள்ளிச் சீருடையில் தோன்றி என்று குழந்தைகளுக்கு
நல்ல முன்னுதாரணமாக நடிக்கிறார்களோ,அன்று பெற்றோர்
மகிழ்வர்.பள்ளிச்சீருடை புனிதமானது,அதை அணிந்து கொண்டு
குழந்தைகளை திசை மாற்றாதீர்கள்.



மேலும் வாசிக்க....

Thursday, 21 February 2013

நான் ஈ- அசகாய சாகசம் செய்யும் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

மனிதனால் சாகசம் செய்ய முடியும் "ஈ"யால் முடியுமா, முடியும் என்று நிருபித்து இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. ஒரு குழந்தைக்கு கதை சொல்வது போல் தொட்ங்கும் கதையில் நம்மையும் குழந்தையாக்கி குதூகலபடுத்துகிறார் இயக்குனர். காதல் ஜோடிகள் இணையும் தருவாயில் காதலைக் கெடுத்த வில்லனை ஹீரோ மறுஜென்மம் எடுத்து பழிவாங்குவதுதான் படத்தின் ஒன்லைன். நேர்த்தியான திரைக்கதை, அசத்தும் visual effects ஆகியவை கதை பழயது என்பதை மறக்கச் செய்கின்ற்ன.




படத்தின் மிகப்பெரிய பலம் " கிச்சா சுதீப் ". கன்னட திரைப்படவுலகில் தொடர்ந்து மூன்று முறை Filmfare வென்றவர், இயக்குந்ர், கிரிக்கெட் வீரர் என பன்முகம் கொண்டவர்.சமந்தா மீது காதலில் உருகுவது, 'நான் ஈ'க்கு பயப்படுவது, மிரட்சியில் உறைந்து நகைச்சுவையும் அளிப்பது என பல காட்சிகளில் பக்காவக பரிமளிக்கிறார்.


                       சமந்தா நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நானிக்கு இது நிறைவான படம்.சின்ன இடைவெளியில் தோன்றினாலும் சந்தானம் அசத்தியிருக்கிறார்.
கிரேசி மோகனின் வசனங்கள் படத்துக்கு பலம்.


'ஈ'யின் பாவனைகளை புரிந்துகொள்பவள், 'ஈ'க்கு பாதுகாப்பு மூகமூடி செய்விப்பவள் என்ற காரணங்களுக்காக கதாநாயகியை மாற்றுதிறனாளி குழ்ந்தைகளை பேணுபவள், மற்றும் Miniature artist என்று லாஜிக் சேர்த்து லயிக்கவைக்கிறார் இயக்குநர்.படப்பிடிப்பின் போது இல்லாத 'ஈ'யை இருப்பதாக நினைத்துக் கொண்டு காட்சிப்படுத்துவது எவ்வளவு சிரமம்?. ஆனால், பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்துவிட்டது.









நானி மீண்டும் மனித உருவம் பெற மாட்டாறா என ஏங்க வைக்கிறார் இயக்குனர்.எனினும், பூர்வஜென்மத்தை விளக்கும் அகோரமான சாமியார், நம்பிக்கையானவனை கொல்லும் போன்றவைத் தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.

தியேட்டரை விட்டு வெளியேவரும் போது "ஏய்! ரொம்ப funnyயா இருந்துச்சுல்ல " போன்ற word-of-mouth publicityயே போதும் "ஈ"யை இன்டர்நேஷ்னல் லெவலுக்கு எடுத்துச்
செல்லும்.


     




மேலும் வாசிக்க....

Wednesday, 20 February 2013

கரு கரு திரு திரு

  நல்ல நேரம் பார்த்து
ராகு காலம் எம கண்டம் பார்த்து
அஷ்டமி, நவமி பார்த்து
என் தயக்கத்தை உடைத்து
என் காதலைச் சொல்ல
உன்னிடம் வந்தால்
உன் சுபமூகூர்த்த கல்யாண பத்திரிக்கையை
என் கைகளில் தவழச் செய்து
மறக்காம வந்துடு தம்பி
என்றாயே, ச்சே......
என்னுள் தோன்றிய காதல் கரு
சிதைவுற்றிருந்தாலே சந்தோஷப்பட்டிருப்பேன்
இப்படி பிறந்துவிட்டு
பேந்த பேந்த விழிக்கின்றதே
மேலும் வாசிக்க....

தாம்பரம் <==> சென்னை கடற்கரை


                       தாம்பரம் பேருந்து நிலையத்தில் நாங்கள் இற்ங்கிய போது மணி சரியாக மாலை ஐந்து. " மச்சான் சீப் இருக்காடா" கேட்டான் ரகு."ஏய்! என்ன நக்கலா,என்
சுருட்ட தலைக்கு என்னைக்குடா சீப் தேவைப்பட்டிருக்கு" இது நான். " சரி விடு.. மோஹன் நீ தாடா". " இளம் சொட்டைய மறைக்க என்னம்மா பாடுபடறான் பாரு".ரவியின் நக்கல் ரகுவை கொதிப்படைய வைத்தது."நோ..ஆங்கிரி மீ..", வில்லு வடிவேல் ஸ்டைலில்
கோபம் காட்டினான் ரகு. அவன் தீவிர வடிவேல் விசிறி.
                       
                      எங்களுக்கு அன்றுதான் செமஸ்டர் நிறைவடைந்திருந்தது. வெவ்வேறு ஊர்களில் பிறந்த எங்களை எங்கள் கல்லூரி விடுதி ஒன்றினைத்தது.நான் வேலூர்காரன், ரகுவுக்கு தஞ்சாவூர் பக்கத்தில் சிறிய கிராமம், ரவி மதுரைக்காரன்.மோஹனுக்கு தாம்பரம்தான் என்றாலும், விடுதியில் படிக்க வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வீட்டில் நிறைவேற்றி வைத்திருந்தனர்.செமஸ்டர் லீவுக்கு உடனே வீட்டுக்கு ஓடிட வேண்டாம், சென்னையை தெரிஞ்சுக்கலாமே என்று எண்ணி நண்பர்களுடன் ஆலோசித்ததில் சென்னை பீச் ஸ்டேஷன், பாரிமுனை இதெல்லாம் பார்த்துட்டு வரலாம் என்றான் மோஹன்.
"சென்னை பீச், ரயில் பயணம்... ஆஹா ஜாலி பண்ணிடலாம் மோஹன்," ஒரே குரலில் சம்மதித்தோம். தமிழக தலைநகரை இன்னும் விசாலமாக தெரிந்து கொள்ள துடித்தோம்.

                                  

                                              



"மச்சான், பஸ் ஸ்டாப்லயே வெயிட் பண்ணுங்க நான் போய் என் ஃபோனுக்கு டாப் அப் பண்ணிட்டு வந்துடறேன்", என்றான் ரவி. "ஆமா, நான் கூட இங்க புதுபட டிவிடி ஏதாவது கிடைக்குமான்னு பார்த்துகிட்டு வந்துடறேன்", என்று கூறினான் ரகு. இருவரையும் இழுத்துப் பிடித்த மோஹன்,"அதான் பீச் ஸ்டேஷன் போறோம்ல, அங்க கிடைக்காத டாப் அப் கார்டா, டிவிடியா... இப்பவே நாம லேட், அங்க போயிட்டு வந்து மறுபடியும் 10.00 மணிக்கு கடைசி பஸ் ஏறணும் புரியுதா..",  "ஆனா என் கிட்ட வெறும் இருநூறு ரூபாதான் இருக்கு" என்றேன் நான்."ஆமா அங்க எல்லாம் காஸ்ட்லியா இருந்த என்ன பண்றது, என் 150 ரூபா கூட பத்தாதே" சிணுங்கினான் ரவி."டேய் அங்க எல்லாம் சீப் ரேட்டுடா," அனைவரையும் சமாதானப்படுத்தி, சப்வே கிராஸ் செய்து, ரயில் நிலையத்துக்கு இழுத்து சென்றான் மோஹன்.

                                           அனைத்து கவுனடர்களிலும் கூட்டம்," நான் தான் டிக்கெட்டுக்கு ஸ்பான்சர் பண்ணுவேன்" என்று சொல்லி க்யூவில் நின்று கொண்டேன். மற்ற மூவரும் அங்குள்ள செல்ஃபோன் விளம்பரங்களையும், தானியங்கி டிக்கெட் வழங்கும் மெஷினைப்பற்றியும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை க்யூவில் நின்று கொண்டே பார்த்த்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு கைலி கட்டிய ஆசாமி க்யூவில் சாமார்த்தியமாக நுழைய முயன்றான்."மச்சான்.." என்ற என் அபயக் குரல் அவர்களை அடைந்தவுடன், சற்று தூரத்திலிருந்த மூவரும் வேகமாக ஓடி வந்து அவனை இழுத்து வெளியே தள்ளினர்.அவன் குடித்திருந்தான்.கால்கள் தடுமாறி ஏதோ உளறிக்கொண்டே இருந்தவனை அவன் நண்பன் எவனோ பிடித்து ஓரமாய் இழுத்துச் சென்றான்."ச்சே... என்ன ஜென்மங்களோ" என்று நான் அலுத்துக்கொண்டிருந்தபோதே என் முறை வந்தது, " நாலு பீச் வித் ரிடர்ன்," சரியாக 56 ரூபாய் கொடுத்தேன்.
எங்கு சென்றாலும் சரியான சில்லறை கொடுப்பது என் பழக்கம்.
                             ஆளுக்கொரு டிக்கெட் என பிடுங்கிக்கொண்டு வேகமாக படிக்கெட்டுகளில் ஏறினர், கூடவே நானும். வேகமாக ஏறியதில்
ரகுவின் கால்கள் படிக்கட்டுகளில் இடித்துக் கொண்டது, வலி தாங்கமுடியாமல், " யம்மா.. முடியல" என்றான். " அடிப்பட்டாலும் வடிவேல் ஸ்டைல்லதன் அழுவீங்களோ, வேகமா வாடா" என்று அவனை இழுத்துக்கொண்டு ஏறினான் ரவி.நாங்கள் இரண்டாம் பிளாட்பாரத்தில் இறங்குவதற்கும், "B" என்று குறிக்கப்பட்ட ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது."B  ன்னா bad train  னு அர்த்தமாடா?" அப்பாவியாய் கேட்டான் ரவி. "B ன்னா Beach மறுபடியும் அங்கிருந்து ரிடர்ன் அகும்போது 'TBM' னு மாத்திடுவாங்க. 'TBM' ன்னா Tambaram" விளக்கமளித்தான் மோஹன்.குமுதம், டாடா இன்டிகாம் என பல வித விளம்பரங்களை தாங்கி வந்த ரயிலில், விளம்பரம் ஏதும் எழுதப்படாத பெட்டியே எங்கள் சாய்ஸாக இருந்தது."வண்டி கிளம்பரத்துக்குள்ள வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு, ஓடிப்போய் Sport star மேகசினை வாங்கி வந்தேன் நான்." For the kind Attention of Passenger.." ஆங்கிலத்தில் தொடங்கிய அறிவிப்பு, தமிழிலும் பிறகு இந்தியிலும் கூறப்பட்டது." தோ நெம்பன், பிளாட்ஃபார்ம் மே பிரவானா ஹோகி" என்று இந்தி அறிவிப்பு முடிந்ததும் வண்டி கிளம்பியது.நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்வண்டி பயணம் என்பதால் நாங்கள் உற்சாகமடைந்தோம்.





 தாம்பரம் சானடோரியம் ஸ்டேஷனில் ஏறிய ஒரு கண்ணாடிக்காரர் எங்கள் முன் வந்தமர்ந்தார்.கொஞ்சம் வீங்கிய வயிறு, கையில், சில கோப்புகளை தாங்கிய பை என அரசு ஊழியர் என பார்த்தவுடனே சொல்லும் தோற்றம் அவருக்கு. என் கையிலிருந்த Sportstar-ஐ மோஹன் எடுத்து புரட்டிக்கொண்டிருந்தான். கண்ணாடிக்காரரின் செல்ஃபோன் சிணுங்கியது."ஆங்! இதோ சானடோரியத்துல டிரெயின் ஏறிட்டேன் , இன்னும் டிவெண்டிஃபைவ் மினிட்ஸல
சைதாப்பேட் வந்துடுவேன்... நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க எல்லா ஏற்பாட்டையும் நானே பார்த்துக்குறேன்.." தொடர்ந்த அவருடைய பேச்சில், அரசு வேலையைத்
தவிர்த்து ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் வேலை பார்க்கிறார் எனப் புரிந்தது. சட்டென்று திரும்பிப் பார்த்தால் ரவியும், ரகுவும் தங்களுக்குள்ளேயே சிரித்துக்
கொண்டிருந்தனர். என்னவென்று ரகுவைக் கேட்டால், " மச்சான், அந்த ஆளு பேண்ட், ஜிப்பே போடலடா.." அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
உண்மைதானா என்று உறுதி செய்து கொள்ள அவரது இடுப்புக்கு கீழே என் பார்வையை நகர்த்தினேன், ஆம்! உள்ளே மடித்து வைத்த அவரது சட்டை அந்த மானம் காக்கும் இடைவெளியில் பல் இளித்துக்கொண்டிருந்தது. அவர் செல்ஃபோனை பாக்கெட்டில் வைத்துவிட்டு மாலை நாளிதழ் ஒன்றை மும்மரமாக புரட்டிக்கொண்டிருந்தார். நண்பர்களின் சிரிப்பை அடக்கிவிட்டு மெல்லிய குரலில் சார் என்றேன்,பேப்பர் விலகியது, என்ன என்று புருவங்களை உயர்திதி கம்பீரப்பார்வையோடு கேட்டார். மெல்ல அவர் காதருகே சென்று " உங்க பேண்ட் ஜிப் போட மறந்துட்டு இருக்கீங்க", என்றேன். கம்பீரம் கலேபரம் ஆனது, அவசரமாக இழுத்துவிட்டு பேப்பர் படிக்க ஆரம்பித்துவிட்டார். பதற்றத்தை மறைக்கவும் பேப்பர் பயன்படும் என்று அன்று எனக்கு விளங்கியது.



   மாம்பலம் வந்தவுடன் வண்டியில் கூட்டம் நெருக்க ஆரம்பித்தது. இந்த கூட்டத்திலும், " சமோசா.. சூடானா சமோசா"  என்று வியாபாரம் பார்த்தார்சமோசாக்காரர். "ச்சே! கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்னு நெனச்சா எப்படி நெருக்கறானுங்க பாரு" புலம்பினான் ரவி.
என் காலை எவனோ மிதித்தான், "ஹலோ மிஸ்டர், கால மிதிக்காதீங்க" என்றேன். " சாரி சார்" என்று சன்னமான குரலில் பதில் வந்த திசையைப் பார்த்தால்
நீண்ட நாள் பழகிய நபர் போல தெரிந்தது.யாரென்று விலக்கிப் பார்த்தால், " அட! நம்ம பூபதி!." பூபதி எங்கள் வகுப்புத் தோழன், "என்ன மச்சான், இந்த நேரத்துல, இப்ப செமஸ்டர் லீவுதான, ஏன் இப்படி  உடம்பு கெடற அளவுக்கு ஊர் சுத்துற" விசாரித்தேன் நான். "இல்லையே இவன் அநாவசியமா ஊர் சுத்துற ஆள் கிடையாதே" இது ரகு. " என்ன மாப்ளே, மணி 6.30 ஆகுது.  எங்க போயிருந்த தயங்காம சொல்லு" என்றான் மோஹன், நாங்கள் கேட்க, கேட்க அவன் கலக்கமடைந்தான், " அது, அது வ்ந்து தி.நகர்.ல ஒரு சாக்லெட்
கம்பெனியில வேலை பார்க்குறன்டா". " என்னது வேலையா ?!" நால்வரும் அதிர்ந்தோம், " ஏண்டா அப்பா கவர்ன்மெண்ட் ஜாப்லதான இருக்காரு அப்புறமெதுக்கு
இதெல்லாம்?" விசாரித்தோம்." இல்ல அவர் அக்கா கல்யாண விஷயமா பிசியா இருக்கார்.அதான் அவர அநாவசியமா தொந்தரவு செய்ய வேண்டாம், நம்ம
தேவைகளை நாமளே பூர்த்தி செஞ்சுக்கலாம்னு, அடுத்த செமஸ்டருக்கு புக்ஸ் செகண்ட் ஹேண்ட்ல வாங்கணும்னா கூட குறைஞ்சது அறுநூறு ரூபாய் வேணுமில்ல,
அதான் லீவுல வேலைப் பார்க்குறேன்". "சரி, அப்படி என்ன வேலை அது?" விசாரித்தேன் நான். " அதுவா காலையில ஆறு மணியில இருந்து, சாயங்காலம் ஆறு
மணி வரைக்கும் வேலை பாக்கணும், தினமும் குறைஞ்சது 200 பாட்டிலுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஃபில் பண்ணனும், டிரே அடுக்கணும், சாக்லெட் கலவைய கிண்டி விடனும்னு, இன்னும் நிறைய, ஒரு நாள் வேலை செஞ்சா 125 ரூபா தருவாங்க, சாப்பாடு அவங்களே போடுவாங்க, சுமாராத்தான் இருக்கும்",
பேசிக்கொண்டிருக்கும்போதே, " சரி, பார்க் ஸ்டேஷன் வந்துடுச்சு நான் இறங்கிக்கறேன், நீங்க பீச்சுக்குதான போறீங்க, பத்திரமா போயிட்டு வாங்க"
விடைப்பெற்றான் பூபதி.







                  

கையில் செலவழிக்க வைத்திருந்த காசின் அருமையை, அதை சம்பாதிக்க ஒருவன் அனுபவிக்கும் வேதனைகளை, நெடிப் பொழுதில்
உணர்த்திவிட்டு மறைந்தான் பூபதி. அதுவரை ஆனந்த உலகில் மிதந்து வந்த நாங்கள் எங்களுடன் பயனித்த சக பயனிகளை கவனித்தோம்.
அவர்களுள்தான் எவ்வளவு வேற்றுமை, மகிழ்ச்சி, சோகம், களைப்பு, மறுநாள் பற்றிய கவலை. பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கையில் தொட்டுக்
கும்பிட்டான் ரகு.பீச் ஸ்டேஷனில் வண்டி நின்றபோது, எங்கள் நால்வருக்கும் ஏதோ நல்ல மாற்றம் வந்திருப்பதை உண்ர்ந்தோம்.ரயிலை விட்டு இறங்கி,
எதிர் திசையில் TBM என்று குறிக்கப்பட்டிருந்த ரயில் வண்டியில் ஏறினோம். இம்முறை எங்கள் பயணம் தாம்பரத்தை நோக்கி அல்ல, பொறுப்பான,
வளமான எதிர்காலத்தை நோக்கி.



மேலும் வாசிக்க....

ட்விட்டரில் தொடர்பு கொள்க

என் லொள்ளு பவனில் நான் பரிமாறும் பதிவுகள்
உங்களுக்கு பிடித்திருந்தால், பின்னூட்டமிட விரும்பினால், ஏதேனும்
சந்தேகமிருந்தால் என் ட்விட்டர் பக்கத்தில் Retweet செய்யுங்கள்.


140 எழுத்துக்களையும் தாண்டி எழுத விரும்பினால்
twitlonger இணையதளத்தைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.உங்கள் கருத்துகள்
வரவேற்கப்படுகின்றன.
மேலும் வாசிக்க....

Tuesday, 19 February 2013

Google மற்றும் Bloggerக்கு என் நன்றிகள்


                    என் எழுத்துக்களுக்கு மேடையமைத்து தந்துள்ள Google மற்றும் Bloggerக்கு நூறு கோடி நன்றிகள்.

ஆங்கில நன்றி


               My gratitude for Google and Blogger for providing me the platform to spread my ideas. Thank you, Google.
மேலும் வாசிக்க....

அழகிக்கு நன்றி


தமிழில் தட்டச்சு செய்ய எளிமையான TRANSLITERATION வசதியளிக்கும்
மென்பொருளான அழகியை இலவசமாக வழங்கும் அழகி இணையதளத்துக்கு ,என் மனமார்ந்த நன்றிகள்.தமிழின் வளர்ச்சி மட்டுமே அழகியின் நோக்கு.
                         
பதிவுலகில் பயணிக்க விரும்புவோரின் உற்ற நண்பன் அழகி,நண்பி எனவும் சொல்லலாம்.மீண்டும்
சொல்கிறேன், நன்றி அழகி.













 
மேலும் வாசிக்க....

கேள்வியுலகம்

இவ்வுலகில் வாழ்கீறீர்களா? அதுவும் இந்தியாவிலா?
கண்டிப்பாக பல கேள்விகள் உங்களை சூழ்ந்திருக்கும் அல்லவா? சிலவற்றை பார்போமா?
நீங்கள் பிறந்தவுடன் உங்கள் பெற்றோரிடம், என்ன குழந்தை? சந்தோஷம்தானா ? குழந்தைக்காக வேண்டிக்கிட்டதை நிறைவேத்திட்டியா?
எப்ப மொட்டை? ஸ்கூலில் சேர்த்தாச்சா ? எப்படி படிக்கிறான்?
இத்தனை கேள்விகளும் நீங்கள் மழலையில் திளைத்துக்கொண்டு இருக்கும்போதே உங்கள் பெற்றோரை துளைக்கின்றன அல்லவா? 
மேலும் சிலவற்றை பார்ப்போமா ? பையன் என்ன மார்க்கு வாங்குறான் ? டெந்த்க்கு அப்புறம் என்ன குருப் ? ப்ளஸ் 2 கோச்சிங் எங்க சேர்த்திங்க?
என்ன காலேஜ் ? படிப்ப முடிச்சுட்டானா?

ஸ்ஸ்ஸ்....கண்ண கட்டுதே. சரி , இந்த கட்டம்தான் நமக்கு கொஞ்சம் ரிஸ்கியானது. இதுவரைக்கும் கேட்ட கேள்விக்கெல்லாம், உங்கள் பெற்றோரிடம் கேட்கப்பட்டவை
இனிமேல் உங்க்ளிடம் கேள்விகள் தொடரும். என்ன தம்பி வேலைக்குப் போல? நீ நல்லா படிப்பியே ? இன்னுமா வேலைக்குப் போல? ஏன் நீ இத ட்ரை பண்ணக்கூடாது?
எல்லாருக்கும் ஏதோ ஒரு பொய்ய சொல்லி சமாளிச்சிட்டு, கஷ்டப்பட்டு ஒரு வேலைய தேடிப்போம்.

இப்படி கேள்விகள் தொடரும் உலகத்துல நாம ஜெயிச்சு வந்தப்பறம் அடுத்த கேள்வி சுழற்சி நம்மை சுத்தும். என்னப்பா கல்யாண்ம் ஆயிடுச்சா?
எப்ப குழ்ந்தை? இதுதான் வாழ்க்கை.
மேலும் வாசிக்க....

ஹோட்டல் லொள்ளு பவன்- இந்த வலைப்பூ பற்றி

ஹோட்டல் லொள்ளு பவன்- Coffee காஷ்யப் என்ற எனது கற்பனைத்
திறனை வெளிப்படுத்த சரியான் தளம் வலைப்பூ என்று அறிந்து கொண்டேன். ஒருவரின் எழுத்துக்களை தானே
பிரசுரித்துக் கொள்ள உதவும் ப்ளாகர் தளத்துக்கு என் முதல் நன்றிகள்.இந்த வலைப்பூ லொள்ளு பவன், என
பெயரிடப்பட்டுள்ளதால் ஏதோ காமெடி நாடகங்களை அரங்கேற்றும் தளம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
எனக்கு இயல்பாகவே நகைச்சுவை பிடிக்கும், மற்றும் ஹோட்டல் என்றால் அனைத்து வகையான் உணவுகளும்
பரிமாறப்படுவது போல என் லொள்ளு பவனில் எனக்கு ஆர்வமுள்ள பல தளங்களும் பரிமாறப்படும்.
                                             என் வாழ்வில் நான் கடந்து வந்த,கடக்கின்ற,கடக்கப்போகின்ற பாதையில் சினிமா,
வெற்றி தோல்விகளை எதிர்நோக்குதல், கல்வியில் சிறந்து விளங்க குறிப்புகள், சமூக ஏற்றத்தாழ்வுகள்,
நிகழ்வுகள், விளையாட்டு என பல்வேறு தலைப்புகளிலும் நான் இந்த லொள்ளுபவனில் எழுத விரும்புகிறேன்.
என் தாய், தந்தை எனக்கு வழங்கிய எழுத்தறிவு எனக்கு என் சுயதேடலில் மூலம் என் அறிவை பன்மடங்கு பெருகச்
செய்துள்ளது.இதை தன்னடக்த்தோடே சொல்லிக் கொள்ளிக்கொள்கிறேன்.யார் மனதையும் புண்படுத்தாமலும்,
யாரையும் நகல் எடுக்காமல் எனக்கான் தனிப்பட்ட அடையாளத்தோடு லொள்ளுபவனில் என் எழுத்துக்கள் மிளிரும்.
வாசித்து மகிழுங்கள்.
மேலும் வாசிக்க....

Monday, 18 February 2013

வாங்க வாங்க

வாங்க வாங்க லொள்ளு பவனுக்கு.நல்லா இருக்கீங்கீங்களா. ஒரு காபி சாப்பிடறீங்களா.

 

பெண்டாட்டி, பிள்ளைக்குட்டி எல்லாம் சௌக்கியமா.இந்த புள்ளக்குட்டி பத்தி பேசுனா சிலருக்கு குளிர் ஜீரம் வந்துடும்.ஏன்னா, அதுகள பேனி பாதுகாக்கறது எம்புட்டு சிரமம்.என் ந்ண்பர் ஒருத்தர் ஆபீஸுக்கு ஸ்கெட்ச் பென்னு, ஜியாமெட்ரி பாக்ஸெல்லாம் கொண்டு வந்திருந்தார், கேட்டா புள்ளைக்கு ப்ராஜெக்ட் வொர்க் செய்யுறாராம்.சரின்னு ஆபீஸ் முடிஞ்சு பஸ் ஏறலாம்னு பார்த்தா, காலேஜ் பசங்க கூட்ட அலையில சமாளிச்சு ஏற வேண்டியதா போச்சு.என்ன ஆபீஸ்ல வேலைப் பாக்குறேன், பஸ்சுல போறேன்னு பாக்கறீங்களா? என்ன செய்ய ஒரே Inflation, இந்த பெட்ரோல், டீசல் விலைய நிர்ணயிக்குற அமைதி முனிவர்,என்னைக்காவது
பஸ்சுல footboard- அடிச்சுருப்பாரா?.

        சரி நமக்கு பிடிச்ச ஆரிய பவன்-ல காபி சாப்பிடலாம்னு போனா, எனக்கு சர்க்கரையில்லா காபி தர்றாரு காபி மாஸ்டர் கண்ணன். "உங்களுக்கு சர்ககரை வரக்கூடாதுல்ல சார்", " ஏம்பா! உனக்கு இந்த அக்கறை, வீட்ல
அவ வெக்கிற வடிச்ச தண்ணிக்கும், காபிக்கும் வித்தியாசம் தெரியாமத்தானே உன் கிட்ட வர்றேன்.உன் அன்புக்கு அளவேயில்லையா?.ஆரிய பவனில் எப்போதும் இப்படித்தான், அவர்கள் ஆப்பத்தோடு அன்பையும் பரிமாறுவார்கள்.தயிர்வடை கொடுக்கும் சப்ளையர்கள் தன்னடக்கத்தோடு இருப்பார்கள்.அன்றாட பணிச்சுமையில் இருந்து எனக்கு இதமான விடுதலை அளிப்பவர்கள் மேல் நான் வைத்துள்ள அன்பு, என் வலைப்பூவின் பெயரிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
       என் லொள்ளு பவனில் நான் கடந்து வரும் மனிதர்கள்,சினிமா,என் சிந்தனைகள்,சில சுவையான கிறுக்கல்கள் போன்றவற்றை
போகிறேன்.ஆரிய பவன் எனக்கு இதமளிப்பதைப்போல் என் லொள்ளு பவனும் உங்களை குதூகளிக்கும் என நம்புகிறேன். இந்த தளத்தை அமைத்துக் கொடுத்த Blogger-க்கு நன்றி.உங்கள் வருகைக்கு நன்றி.சுவைமிகு பதிவுகளை படித்து மகிழ்க. மீண்டும், மீண்டும் வருக.

                  அன்புடன்

                                         காபிகாஷ்யபன்

மேலும் வாசிக்க....

அழகி

அழகி
தமிழில் தட்டச்சு செய்ய